கல்லூரி காலங்கள் எனும் நிகழ்ச்சி பற்றி GNU/Linux இணையதளத்தின் மூலமாக அறியக்கிடைத்தது. இந்நிகழச்சியை வெ.இறையன்பு அவர்கள் வழங்குகிறார்கள். YouTubeல் முதலாவது நிகழ்ச்சியை பார்த்தபோது மிகவும் அருமையாக இருந்தது, அறிவுரையாக இல்லாமல் நண்பனோடு நண்பனாக தோளில் கைப்போட்டு பேசுவதுபோல் மிகவும் அழகாக கருத்துக்களை எடுத்துகூறுவார். கல்லூரி வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ளலாம் என நினைப்பவர்களும், கல்லூரி வாழ்க்கையை வாழ்வின் முன்னேற்றுக்கு ஏணி படியாக அமைத்துக்கொள்வது எப்படி என நினைப்பவர்களும், அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளும், இளைஞர்களும் அவசியம் பார்க்கவேண்டிய நிகழ்ச்சி. பொதுவாக பார்ப்பவர்களுக்கும் மிகவும் பிரயோசனமான ஒரு நிகழ்ச்சி புத்தகங்கள், வரலாற்று நிகழ்வுகள் ஏன் திரைப்படங்களில் இருந்துகூட சில சுவாரஸ்யமான் வாழ்க்கைக்கு தேவையான விடயங்களை கூறுகிறார். நான் நிகழ்ச்சியை கேட்டுகொண்டே அவர் கூறும் விடயங்களை கூகுல் செய்து கொண்டிருப்பேன், நமக்கு தெரியாத பலவிடயங்களை அதன்மூலம் கற்றுக் கொள்ளகூடியதாக இருக்கிறது.
இதுவரை நான் பார்த்த தொடர்கள் வரைக்கும் நிருபிக்கப்படாத டார்வின் கோட்பாடுகளில் இருந்து அவர் கூறும் சில விடயங்களை மட்டும் என்னால் ஏற்றுகொள்ள முடியாமல் உள்ளது, மற்றவரை அனைவரும் பார்க்க வேண்டிய அற்புதமான நிகழ்ச்சி, தமிழில் இதுபோன்ற சுய ஊக்கம் அளிக்கக் கூடிய நிகழ்சிகள் உள்ளனவா என்பது சந்தேகமே!
நிகழ்ச்சியை நான் தரவிறக்கம் செய்த போது இந்நிகழச்சி ஒளிபரப்பப்படுவதற்கு முன் அதைப்பற்றி வெ.இறையன்பு அவர்கள் கூறியது.
"கல்லூரிப் பருவம் எவ்வளவு முக்கியமானது? இந்தப் பருவத்தில்தான் நாம கரியாகப் போகிறோமா? வைரமாகப் போகிறோமா? கூழாங்கல்லாகப் போகிறோமா? என்பது தீர்மானிக்கப்படுகிறது. இந்த டைம்ல நாம் எப்படி படிக்கிறோம்? எப்படி வாழ்க்கைய பார்க்கிறோம்? எப்படி கோரக்டரை வடிவமைச்சிக்கிறோம்? எப்படி நாம உலகத்தை அணுகிறோம்? எப்படி பண்புகளை வளர்த்துக்குறோம்? இதுதான் நம்மோட வெற்றிய தீர்மானிக்கப்போகிறது. இந்த பருவத்தைப் பொறுத்தவரைக்கும் இது ஒரு மகத்தான பருவம். சரியா கையாளுகிறவங்க பிற்காலத்துல மிகப்பெரிய தலைவர்களா, நிர்வாகிகளா மிகப்பெரிய வர்த்தகத்துல நிபுணர்களா, மிகப்பெரிய பேச்சாளர்களா, மிகப்பெரிய விஞ்ஞானிகளா வருவாங்க அதனால இந்த பருவத்துல முதல் நாள்ல இருந்து நம்மல நாம எப்படி வடிவமைச்சிக்கிறலாம்ங்கிறது குறிச்சு கொஞ்சம் பகிர்ந்துக்கிட்டம்னா உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும், நம்ம நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்கும்."