கடந்த பல மாத காலமாக ஹலால் பிரச்சினை உச்ச கட்டத்தை அடைந்திருந்ததால் எல்லா ஊடகங்களிலும் சிங்கள முஸ்லிம் தரப்புகளை பற்றியே வாத பிரதிவாதங்கள் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த நாட்டில் வாழும் மற்றுமொரு முக்கிய இனமான தமிழ் மக்கள் ஹலால் தொடர்பாக எத்தகைய ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் அல்லது முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பாக அவர்களின் மன நிலை எப்படி இருக்கிறது என்பதனையும் நாம் காலத்தின் தேவை கருதி அவதானிக்க வேண்டியிருக்கின்றது.
என்னோடு குறிப்பிட்ட காலம் இலங்கையில் ஒன்றாக படித்த தமிழ் சகோதரர் ஒருவர் தனது FACE BOOK பக்கத்தில் ஒரு கருத்தை இவ்வாறு வெளியிட்டிருந்தார். அதை உங்கள் சிந்தனைக்கு அப்படியே தருகிறேன்.
கல்விக்காக எம்மை...வியாபாரத்துக்காக உங்களை...தம்பிகளா..தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்...பக்கத்து வீட்டில் செத்த வீடு நடக்கும்போது..நீங்கள் படலைகளை சாத்தியிருந்தால் கூட பரவாயில்லை..குத்தாட்டமல்லவா போட்டீர்கள்...அப்போது நீங்கள் தூக்கிவிட்டிருந்தால் இன்றும் நாளையும் உங்களுக்கு தோள்கொடுக்க நாம் இருந்திருப்போம்...நீங்கள் தான் சேர்ந்துகொண்டு எமை கொண்டுவிட்டீர்களே....இங்கே இன்று நாமோ ஊமைகள்...நாம் உமக்கெப்படி உதவ...
இது தான் எமது சகோதர தமிழ் மக்களின் அமைதியான நிலைப்பாடு
அந்த சகோதரரின் சிந்தனைக்காகவும், நமது மக்களுக்கு நமது நிலைப்பாட்டை தெளிவு படுத்துவதற்காகவும், உங்கள் பக்கத்தில் இருக்கின்ற ஒரு தமிழ் சகோதரர் , நாளை இப்படியான ஒரு விமர்சனத்தை உங்கள் முன் வைத்தால், நீங்கள் எவ்வாறு பதில் அளிக்கவேண்டும் என்பதற்காகவும் இதனை பதிவு செய்கிறேன்.
நண்பர்களே!!! முஸ்லிம் மக்களாகிய நாம் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினையை காலத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவாக பிரித்து நோக்கவேண்டிய ஒரு தேவையை, நாங்கள் விரும்பாமலே விடுதலை புலிகள் எங்கள் மீது திணித்தார்கள். அது தான் கி.மு கி.பி , மாதிரி 90 க்கு முன் 90 க்கு பின் என்ற நிலைப்பாடு.
90 க்கு முற்பட்ட காலத்தை பொருத்தவரைக்கும் முஸ்லிம்கள் கல்வியில் மிகவுமே பின்தங்கிய நிலையில் காணப்பட்டார்கள். எந்த ஒரு உயர் காரியாலயத்துக்கு சென்றாலும் முஸ்லிம் நபர் ஒருவரை பார்ப்பது மிகவும் அபூர்வமானதாகவே இருந்தது. அரசியல் ரீதியாகவும் ஒரு நலிவடைந்த நிலையிலேயே காணப்பட்டார்கள். 80 களின் பின் பகுதிகளிலேயே முஸ்லிம் கட்சிகள் கூட தோன்ற ஆரம்பித்தன. அதுவரைக்கும் தமிழ் மக்களின் அரசியலின் பின்னாலேயே முஸ்லிம்கள் இருந்தனர். பொருளாதாரத்தை பொறுத்த வரைக்கும் வடகிழக்குக்கு உள்ளேயும் வெளியேயும் பாரிய ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டன.

இப்படி 90 க்கு முற்பட்ட காலத்தில் முஸ்லிம்கள் கல்வி, அரசியல், பொருளாதாரம் என்ற எல்லா படி நிலைகளிலும் தமிழ் சமூகத்தை விட பல தசாப்தங்களுக்கு பின்னோக்கிய நிலையிலேயே காணப்பட்டனர். ஒரு சமூகம் தன்னை பாதுகாத்துக்கொள்ளவும் சகோதர சமூகத்தை தூக்கி விடவும் நான் மேலே சொன்ன 3 காரணிகளும் இன்றியமையாதது. நாங்கள் உங்களை தூக்கி விடவில்லை என்று சொல்கிறீர்களே நாங்கள் வடகிழக்கில் இருந்து வெளியேற்றப்பட்டபோது எங்கள் சமூகத்தாலேயே எங்களை காப்பாற்ற முடியவில்லையே, இதற்கு அப்பால் சென்று அரசாங்கத்துக்கு எதிராக நாங்கள் போர்க்கொடி தூக்கவில்லை என்று சொல்கிறீர்களே இது என்ன ஞாயம்??
2 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என்ற அந்த பிக்கப்களில் பூட்டப்பட்ட ஒலிபெருக்கிகளின் முழக்கம் கேட்டவுடன் சிலர்கள் இறந்து போன மையித்துகளை வைத்துக்கொண்டு எப்படி அடக்கம் செய்வதென்று திகைத்துப்போய் நின்றார்கள். மரணப்படுக்கையில் இருந்த எத்தனையோ பேர் போட் இல் ஏறிய உடனே மாண்டுபோனார்கள். பிரசவ தாய்மார்களுக்கு ஆஸ்பத்திரி கட்டில் போளிதீணினால் மூடப்பட்ட படகை தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை.
அழிக்கப்பட்டோம், அலைக்கழிக்கப்பட்டோம், பள்ளி வாசலுக்குள் வெட்டப்பட்டு கிடந்தோம், கைகள் கட்டப்பட்டு வயல்களில் சுடப்பட்டு இறந்தோம், கடைகளின் சாவிகள் பறிக்கப்பட்டோம், வீட்டில் இருந்த டிவி , பிரிட்ஜ் ஐ ஏற்றிய பெடியல்களின் பிக்கப்கள் ரிவேர்ஸ் எடுப்பதற்காக கேட் ஐ திறந்து உதவி செய்தோம், கண் மூடி திறப்பதுக்குள் காணாமல் போனோம்.
90 க்கு பிறகு கூட தமிழ் மக்களை நேசித்தோம். நடந்ததுக்கும் தமிழ் மக்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று புலிகளுக்கு எதிராக இறைவனிடம் பிரார்த்தித்தோம்.தமிழ் மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்று யோசித்தோம். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி புலிகளின் தலைமைதான் என்றார்கள். எந்த முகத்தோடு நாம் புலிகளின் முன்னாள் போவது??? உதவிக்கு வந்த தனது இன சகோதர இயக்கங்களை கூட சுட்டுக்கொன்றார்கள், செய்வது அறியாது விலகினோம். சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடுமா என்ன? தமிழ் அரசியல் வாதிகளையும் சட்ட அறிஞர்களையும் தேடி தேடி சுட்டார்கள், ஒதுங்கினோம். A9 க்குள் உங்களை அடக்கி ஆண்டார்கள் வாய் மூடி மௌனிகள் ஆனோம்.

புலிகள் எங்களுக்கு அடித்த அடியில் இருந்து நாங்கள் மீண்டெழுந்து எங்கள் பாதையையும் பார்வையையும் சரிசெய்ய முன் உங்கள் கதையை முடித்து விட்டார்கள் சகோதரனே!!! அன்று புலிகள் எங்களை விரட்டி அடிக்காமல் இருந்திருந்தால் தமிழ் மக்களின் பலம் இரட்டிப்பாக இருந்திருக்கும், செய்தார்களா? சகோதரனே !!!
அகதி முகாமில் அடித்த வெயில் எங்கள் உச்சி மண்டையில் சுர்ர்ர்ர் எண்டது சகோதரனே!!!
இன்று எம்மை பார்த்தா கேட்கிறீர்கள்??? குத்தாட்டம் போட்டீர்கள் என்று.....
இதை கேட்கும் போது எங்கள் உள்ளம் டர்ர்ர்ர்ர்..... என்குது சகோதரனே!!! டர்ர்ர்.... என்குது
ஏனெனில் அந்த படகில் இருந்த 3 வயது குழந்தை நான் சகோதரனே!!! தலை வலியும் காய்ச்சலும் எங்களுக்கும் தெரியும்!!!
MIFRAAZ SHAHEED, TIANJIN MEDICAL UNIVERSITY - CHINA