உணர்வுகளும், நிகழ்வுகளும் எமது அடிப்படைகளை மறக்கடித்துவிடக்கூடாது.


முக்கியத்துவம் கூடிய விடயங்களுக்கு குறைந்த முக்கியத்துவமும், ஒப்பீட்டளவில் முக்கியத்துவம் குறைந்த விடயங்களுக்கு கூடிய முக்கியத்துவமும் கொடுக்கின்றோம்.

பள்ளிவாசல் தொடர்பாக யாரும் தவறாக பேசினால், மிகவும் வேதனைப்படுகிறோம். ஆனால், அல்லாஹ்வை நினைவுபடுத்தக்கூடிய பள்ளியுடன் நாம் எவ்வளவு தொடர்பாக இருக்கிறோம் என்பதை பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. எமது சுபஹு தொழுகையுடைய நிலை பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.

ஹலால் சின்னம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள சிரமப்படுகிறோம். வட்டி, சீதனம், அடகு, கடமையான ஸகாத்தை நிறைவேற்றாமல் சேர்க்கப்பட்ட பணம், ஊதியத்துக்கு குறைந்த வேலை பார்த்து பெறப்பட்ட சம்பளம், இவைகளை சீர்தூக்கிப்பார்த்து இதிலுள்ள ஹராம்களை பற்றி நாம் பெரிதாக வருந்துவதாக இல்லை.

பேசச் சொன்னால், அல்-குர்ஆன் பேசுகின்ற பெரும் பெரும் சிந்தனைகளை பேசுகின்றோம். அல்-குர்ஆனை கொடுத்து கொஞ்சம் இதனை தஜ்வீத் முறைப்படி ஓதுங்கள் என்றால், கூனிக்குறுகி விடுகிறோம்.

நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக யாரும் பேசினால் மிகவுமே கோபப்படுகிறோம். அவர்களுடைய வாழ்க்கை வழிமுறை எம்மிடம் இல்லாததை எண்ணி நாம் எம்மையே கோபப்படுவதில்லை.

இமாம் அபூஹனீபா அவர்களுடைய வீட்டுக்குப்பக்கத்திலே வசித்துவந்த ஒரு யூதர், அவருடைய வீட்டை விற்கும் போது பெரும் விலையைக் கூறினார். பெரும் விலையை இந்த வீட்டுக்கு சொல்கின்றீர்கள் என்று யாரும் கேட்டால், இந்த வீட்டின் பெறுமதி குறைவுதான் ஆனால் இமாம் அபூஹனீபாவை அயல் வீட்டுக்காரராக பெறுவதென்றால் நீங்கள் இந்த வீட்டைத் தான் வாங்க வேண்டும் என்று சொல்வார் (ஆதாரபூர்வமான தகவலா என்பது பற்றி தெரியவில்லை)

மேலும்,
இப்ன் அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள், "பாவத்தினுடைய ஒரு இயல்பு தான் அடுத்த மனிதர்களின் உள்ளங்களில் அது எம்மீதான வெறுப்பை உண்டு பண்ணும்"

எனவே எமது தனிப்பட்ட வாழ்க்கையை நாம் சுயவிசாரணை செய்துகொள்வது தான் எமது முதன்மையான தேவையாக இருக்கின்றது. அது சீராகிவிட்டால், அல்லாஹ்வுடைய உதவியை பெறுவதற்கு தகுதியானவர்களாக நாம் மாறிவிடுவோம்.

அல்லாஹ் எமது எண்ணங்களை பொருந்திக் கொள்வானாக. காற்றை பொதுவாக்கியது போல், ஹிதாயத்தையும் எல்லோருக்கும் பொதுவாக்குவானாக!